சாமிநாதம், ப. சரவணன், 7 ஏப்ரல் 2018



Tamil Heritage Trust presents
சாமிநாதம்: உ.வே.சா முன்னுரைகள்
by ​ப.சரவணன்
7th April 2018, Saturday 5:30 PM at Arkay Center,
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

தலைப்பு பற்றி:

ஐரோப்பிய காலனியாதிக்கம் இந்தியாவுக்குத் தந்த முக்கியமான கொடையாக அச்சு சாதனங்களையும் அதன் மூலம் நமக்குக் கிடைத்த ஏராளமான நூல்களையும் சொல்லலாம். இன்றும் தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறு குறித்த விவாதங்களுக்கு அச்சிடப்பட்ட நூல்களே முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன.

ஏட்டுச் சுவடிகளாக இருந்த பல்வேறு நூல்களை அச்சிட்டு, அறிவுத்தளத்தைப் பொதுவெளியில் பரப்பிய ஆளுமைகளில் முக்கியமானவர், தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே சாமிநாத ஐயர்.  அழிந்து போகும் நிலையில் இருந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றை, ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகளிலிருந்தும் கையெழுத்து ஏடுகளிலிருந்தும் தேடித் தேடி, கண்டுபிடித்து , சரிபார்த்து பதிப்பித்தவர்.  ஏறக்குறைய நூறு புத்தகங்களைத் தன் வாழ்நாளில் பிரசுரித்திருக்கிறார். இவற்றில் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் மற்றுமல்லாது, கதைச் சுருக்கங்கள், கட்டுரைகள், வாழ்க்கைச் சரிதங்கள், தல புராணங்கள் போன்றவை அடங்கும்.  ஒவ்வொரு புத்தகத்திற்கும் உ.வே.சா எழுதிய முகவுரைகளை 'சாமிநாதம்' என்னும் தலைப்பில் தொகுத்திருக்கும் டாக்டர் ப. சரவணன், உ.வே.சாவின் பங்களிப்பு குறித்தும் தனது பதிப்பு அனுபவங்கள் குறித்தும் பேசவிருக்கிறார். 

பேச்சாளர் குறிப்பு:

'அருட்பா x மருட்பா' என்னும் ஆய்வு நூலின் வழியே பரவலாக அறியப்பட்ட டாக்டர் ப. சரவணன், தமிழ்ச் சமூக வரலாற்றை ஆவணப்படுத்துதலில் முனைந்து செயல்பட்டு வருபவர்.  உ.வே.சாவின் முன்னுரைகளையும், கட்டுரைகளையும், வேறு பல புத்தகங்களையும் பதிப்பித்திருக்கிறார்.  அண்மையில் உ.வே.சா.வின் சுயசரித்திரமான ‘என் சரித்திரம்’ என்னும் நூலை நூற்றுக்கும் மேலான புகைப்படங்களுடனும் வேறுபிற தகவல்களுடனும் பதிப்பித்துள்ளார்.  இவர் பதிப்பித்த மற்றொரு முக்கியமான நூல் சி.வை.தாமோதரனாரின் பதிப்பு முன்னுரைகளான ‘தாமோதரம்’.  சிறந்த நூலுக்கான திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது, தமிழியல் ஆய்வுக்கான தமிழ்ப் பரிதி விருது, இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது, சென்னை கம்பன் கழக விருது முதலான விருதுகளைப் பெற்றவர்.  தற்போது சென்னை மாநாகராட்சி பள்ளியொன்றில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

Entry for the event is absolutely FREE; No registration required. The event will also be available on LIVE.

Tags: Video