Note on Website

In addition to who we are and what we do, this website contains links to all our monthly lectures on youtube. You can search using the name of the speaker or title of the talk. For example, Speaker Name or Title or Keywords, Video will give you list of Videos.

Tuesday, June 10, 2014

புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள் - பேரா. சுவாமிநாதன்தமிழ் இணையக் கல்விக் கழகம்
சென்னை- 600 025.

வழங்கும்

இணையம் வழி
தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்
பற்றிய

தொடர் சொற்பொழிவு-2

'புதுக்கோட்டையின் கலை பண்பாட்டுக் கூறுகள்'
என்னும் தலைப்பில்

பேரா. சு. சுவாமிநாதன்
அவர்கள் உரையாற்றுகிறார்.

            நாள்   :           13.06.2014, வெள்ளிக்கிழமை
            நேரம்            :           மாலை 4.00 மணி
            இடம் :           தமிழ் இணையக் கல்விக்கழகம்,
                                    (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்)
                                    காந்தி மண்டபம் சாலை,
                                    கோட்டூர், சென்னை-25.
                                    தொ.பே: 22201012

அனைவரும் வருக!

முனைவர் .அர.நக்கீரன்
இயக்குநர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றைத் திரட்டி, தொகுத்து இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையக் கல்விக் கழக முயற்சியின் ஒரு பகுதியாக இச்சொற்பொழிவைத் திங்கள்தோறும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டையின் பாரம்பரியம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு, அதற்கே உரிய சில தனிச் சிறப்புகள் உண்டு. இந்திய விடுதலையின் போது மன்னர் ஆட்சியின்கீழ் இருந்த புதுக்கோட்டைக்கு சங்க காலம் முதல் ஒரு வரலாறும் உண்டு.

இது கடந்த கால சமணத்தின் தடங்களைக் கொண்டுள்ளது. புதுக்கோட்டையை கோயில் கட்டடக் கலையின் அருங்காட்சியகம் என்று அழைக்கலாம். ஏனென்றால் இம்மாவட்டத்துக்கு குகைக் கோயில்கள் முதல் நவீன கோயில்கள் வரையான நீண்ட பாரம்பரியம் உள்ளது. திருமயத்தில் உள்ள இரட்டைக் குகைக் கோயில்கள், நார்த்தாமலையில் உள்ள விஜயாலாய சோழீசுவரம், கொடும்பாளூரில் உள்ள மூவர் கோயில், சித்தன்னவாசலில் உள்ள சமணர் குகை ஓவியங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை. புதுக்கோட்டைக் கோயில்களில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைந்த சிற்பங்கள், அம்மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கின்றன.

ஏறக்குறைய 400 ஆண்டுகளாக இம்மாவட்டம் தொண்டைமான் அரசர்களின் ஆளுமையின்கீழ் இருந்தது. இசை, நாட்டியம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றிற்கு அவர்கள் அளித்த ஆதரவின் காரணமாக, தமிழகத்தின் பாரம்பரியத்திற்கான அடிச்சுவடுகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் காணலாம். 

பேரா. சு. சுவாமிநாதன் - ஓர் அறிமுகம்

புதுக்கோட்டையைச் சேர்ந்தவரான சுவாமிநாதன், கலை, கலாசார ஆர்வலர். நம் மக்கள் அவர்களுடைய பாரம்பரியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் கருத்து உடையவர். இயந்திரப் பொறியாளரான இவர், தில்லி ஐஐடியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக இருந்திருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர், தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை என்னும் அமைப்பை நிறுவி, அதன்மூலம் நம் கலாசாரத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அஜந்தா  ஓவியங்கள் குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். பல்லவர்களின் மாமல்லபுரம் குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகம் எழுதியுள்ளார். இவருடைய மின்னஞ்சல் முகவரி sswami99@gmail.com

Monday, June 2, 2014

உவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents

உவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும்

by 

Ravishankar Thiyagarajan
at 5.30pm on Saturday, June 7, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
“தமிழ்த் தாத்தா” என்றவுடனேயே தற்கால இளைஞர்களால்கூட எளிதில் நினைவுகூரப்படுபவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். தமிழைப் படிப்பதற்காக என்றே சங்கீத பரம்பரையை விட்டு விலகி, தமிழ் கற்று, தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

ஓய்வு காலங்களில் சோர்வு பார்க்காமல் கரைந்தும் எரிந்தும் போகவிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து, மறந்துபோகப்பட்ட அரிய தமிழ்நூல்களை பிரதிகள் ஒப்பிட்டு, பழுது பார்த்து, செம்மை செய்து, குறிப்புகள் எழுதி, காகித நூல்களாக்கிச் சாதாரண மக்களிடமும் கொண்டுசேர்த்தார்.

சுவடிகளைத் தேடும்போது சென்ற இடங்கள், பெற்ற நண்பர்கள், கிடைத்த அனுபவங்கள், ஆழ்ந்த அழியாத ஞாபகங்கள் ஆகியவற்றின் உதவியால் பின்னாளில் பரவலாக வாசிக்கப்பட்ட, தமிழ்ப் பத்திரிகைகள் போற்றும் எழுத்தாளராகப் பரிமளித்தார்.
தெளிவான எண்ணங்கள், நேர்த்தியான வார்த்தைகள், துல்லிய-சுருக்க-ரஸமான விவரிப்புகள், மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் படிக்கக்கூடிய நிகழ் களங்கள்,  வருடும் நகைச்சுவை,  எளிய சுவை ஆகியவை கொண்ட உவேசா பாணித் தமிழ் நடை, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த இலக்கியகர்த்தாக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

உவேசாவின் எழுத்துகள் பண்டைத் தமிழ் உரைநடைக்கும் இன்றைய தமிழ் உரைநடைக்கும் மட்டுமின்றி பண்டைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும்கூடப் பாலமாக இருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள், முக்கியமாக தமிழையும் இசையையும் அண்டியவர்கள், வாழ்ந்த வாழ்க்கையின் சில பகுதிகளை, அவருடைய எழுத்துகள் நமக்குத் தருகின்றன.
பேச்சாளர் பற்றி
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மூத்த புதல்வரான ரவிசங்கர், தொல்பொருள் ஆராய்ச்சியளார் ஆக வேண்டும் என்ற கனாக் கண்டு, பட்டய கணக்கராக மாறினார், ‘வீட்டுக் கட்டுமான நிதி’ நிறுவனம் ஒன்றின் சென்னைக் கிளையில் முக்கிய அதிகாரியாகப் பணிபுரிகிறார். கொளஹாத்தியிலும் ஹைதராபாத்திலும் பணிபுரிந்தவர். இஸ்லாமியச் சரித்திரத்திலும் இஸ்லாமியக் கட்டடக் கலையிலும் இவருக்குத் தனிப் பற்று உண்டு.
சிறு வயதில் படித்த ‘என் சரித்திரம்’ எற்படுத்திய, இன்றும் மாறாத பிரமிப்பின் உந்துதலினால், உவேசாவின் பல வசனநூல்களில் கண்டதையும் கேட்டதையும், புதியதையும் பழையதையும், சரித்திரங்களையும் வராலாறுகளையும், இந்தச் சொற்பொழிவின் முலம் நம்முடன் நினைவுபடுத்திக்கொள்கிறார்.