உவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும் - ரவிஷங்கர்

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents

உவேசா : சரித்திரங்களும் வரலாறுகளும்

by 

Ravishankar Thiyagarajan
at 5.30pm on Saturday, June 7, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.
“தமிழ்த் தாத்தா” என்றவுடனேயே தற்கால இளைஞர்களால்கூட எளிதில் நினைவுகூரப்படுபவர் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். தமிழைப் படிப்பதற்காக என்றே சங்கீத பரம்பரையை விட்டு விலகி, தமிழ் கற்று, தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

ஓய்வு காலங்களில் சோர்வு பார்க்காமல் கரைந்தும் எரிந்தும் போகவிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து, மறந்துபோகப்பட்ட அரிய தமிழ்நூல்களை பிரதிகள் ஒப்பிட்டு, பழுது பார்த்து, செம்மை செய்து, குறிப்புகள் எழுதி, காகித நூல்களாக்கிச் சாதாரண மக்களிடமும் கொண்டுசேர்த்தார்.

சுவடிகளைத் தேடும்போது சென்ற இடங்கள், பெற்ற நண்பர்கள், கிடைத்த அனுபவங்கள், ஆழ்ந்த அழியாத ஞாபகங்கள் ஆகியவற்றின் உதவியால் பின்னாளில் பரவலாக வாசிக்கப்பட்ட, தமிழ்ப் பத்திரிகைகள் போற்றும் எழுத்தாளராகப் பரிமளித்தார்.
தெளிவான எண்ணங்கள், நேர்த்தியான வார்த்தைகள், துல்லிய-சுருக்க-ரஸமான விவரிப்புகள், மேலோட்டமாகவும் ஆழ்ந்தும் படிக்கக்கூடிய நிகழ் களங்கள்,  வருடும் நகைச்சுவை,  எளிய சுவை ஆகியவை கொண்ட உவேசா பாணித் தமிழ் நடை, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுத ஆரம்பித்த இலக்கியகர்த்தாக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

உவேசாவின் எழுத்துகள் பண்டைத் தமிழ் உரைநடைக்கும் இன்றைய தமிழ் உரைநடைக்கும் மட்டுமின்றி பண்டைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும்கூடப் பாலமாக இருக்கிறது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் முன்னோர்கள், முக்கியமாக தமிழையும் இசையையும் அண்டியவர்கள், வாழ்ந்த வாழ்க்கையின் சில பகுதிகளை, அவருடைய எழுத்துகள் நமக்குத் தருகின்றன.
பேச்சாளர் பற்றி
தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மூத்த புதல்வரான ரவிசங்கர், தொல்பொருள் ஆராய்ச்சியளார் ஆக வேண்டும் என்ற கனாக் கண்டு, பட்டய கணக்கராக மாறினார், ‘வீட்டுக் கட்டுமான நிதி’ நிறுவனம் ஒன்றின் சென்னைக் கிளையில் முக்கிய அதிகாரியாகப் பணிபுரிகிறார். கொளஹாத்தியிலும் ஹைதராபாத்திலும் பணிபுரிந்தவர். இஸ்லாமியச் சரித்திரத்திலும் இஸ்லாமியக் கட்டடக் கலையிலும் இவருக்குத் தனிப் பற்று உண்டு.
சிறு வயதில் படித்த ‘என் சரித்திரம்’ எற்படுத்திய, இன்றும் மாறாத பிரமிப்பின் உந்துதலினால், உவேசாவின் பல வசனநூல்களில் கண்டதையும் கேட்டதையும், புதியதையும் பழையதையும், சரித்திரங்களையும் வராலாறுகளையும், இந்தச் சொற்பொழிவின் முலம் நம்முடன் நினைவுபடுத்திக்கொள்கிறார்.