சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தின் முன்னாள் காப்பாளர் டாக்டர் வே. ஜெயராஜ், "பண்பாட்டுச் செல்வங்களின் பாதுகாப்பில் மக்களின் பங்கு" என்ற தனது உரையில், பாரம்பரியப் பாதுகாப்பில் தனது முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தின் படிப்பினைகளை வடித்து, ஆக்கபூர்வமான யோசனைகளை நமக்கு வழங்குவார்.
முனைவர் வே ஜெயராஜ் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை அரசு அருங்காட்சியகத்தில் (எழும்பூர் அருங்காட்சியகம்) காப்பாளராகப் பணியாற்றினார். இவர் வேதியியலில் M Sc, வரலாற்றில் M.A. மற்றும் வரலாறு, வேதியியல் மற்றும் தொல்லியல் ஆகியவற்றை இணைக்கும் இன்டர்-டிசிப்ளினரி ஆய்வுகளில் Ph D பட்டம் பெற்றவர்.
ஈரோடு மற்றும் வேலூரில் உள்ள அருங்காட்சியகங்களில் காப்பாளராக, அவ்வருங்காட்சியகங்களுக்காக ஆயிரம் பொருட்களை சேகரித்த பெருமைக்குரியவர். எழும்பூர் அருங்காட்சியகத்தில் இரசாயன பாதுகாப்புத் துறை தலைவராகப் பணியாற்றியவர்.
அவர் ஏழு புத்தகங்கள், பல சிறு புத்தகங்கள், ஏராளமான ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் பத்திரிகை கட்டுரைகளை எழுதியுள்ளார். பல மாணவர்களுக்கு M Phil மற்றும் Ph D பட்டம் பெற வழிகாட்டியாக (Guide) இருந்துள்ளார்.
அவர் ஹெப்சிபா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் கன்சர்வேஷன் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து அதன் கெளரவ இயக்குநராக தலைமை தாங்கி வருகிறார். தொல்பொருட்களின் பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக நிர்வாகம், தொல்பொருட்கள் மற்றும் கலைப் படைப்புகளை மதிப்பீடு செய்தல் போன்றவற்றில் பயிற்சி அளிப்பதிலும் ஆராய்ச்சிகள் நடத்துவதிலும் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை இலக்கியச் சங்கம், அரசு ஓரியண்டல் கையெழுத்துப் பிரதிகள் நூலகம், சென்னை அரசு கண் மருத்துவ மனை போன்றவற்றில் மட்டுமல்லாமல், கேரளாவில் உள்ள மாநிலக் காப்பகங்கள், ஆந்திராவில் உள்ள கடப்பா நூலகம் மற்றும் புனேவில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பண அருங்காட்சியகம், கோழிக்கோட்டில் உள்ள கிருஷ்ணமேனன் அருங்காட்சியகம் மற்றும் மைசூர் அரண்மனை போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலும் தொல்பொருட்களை மீட்டெடுத்த பெருமை டாக்டர் ஜெயராஜ்க்கு உண்டு.