‘சித்தன்னவாசல் ஓவியங்கள் என் பாட்டன் வரைந்தவை’

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் ‘பேச்சுக் கச்சேரி 2012’ மூன்றாம் நாள் சில மாற்றங்கள் இருந்தன. பேரா. சுவாமிநாதன் அஜந்தா ஓவியங்கள் பற்றிப் பேசவேண்டும். அடுத்த நாள் 28 அன்று சிவராமகிருஷ்ணனும் ஓவியர் சந்ருவும் பல்லவ, பாண்டிய ஓவியங்கள் பற்றி. ஆனால் சந்ரு அவர்கள் சித்தன்னவாசல் பற்றிய தன் பேச்சு 27 அன்று என்று நினைத்துக்கொண்டார். அன்ரு மாலையே அவர் சித்தன்னவாசல் செல்வதற்கும் பயண ஏற்பாடுகள் செய்திருந்தார். எனவே பல்லவ, பாண்டிய ஓவியங்கள் பற்றிய பேச்சுகளை முடித்துவிட்டு அஜந்தாவை அடுத்த நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.

முதல் இரு நாள்கள் ஒரு பரந்த பார்வை என்றால் மூன்றாம் நாள் ஒரே இடத்தைச் சுற்றி, ஆனால் நீண்ட ஒரு காலத்தைப் பார்வையிடுவதாக இருந்தோம். மாறாக நமக்குக் கிடைத்தது முற்றிலும் வேறுவிதமான அனுபவம்.

மூத்தவரான ஓவியர் சந்ருவுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்பதில் சிவராமகிருஷ்ணன் மிகவும் கவனமாக இருந்தார். அதனால் சிவராமகிருஷ்ணன் சொல்லவந்த பல விஷயங்களைச் சொல்வதற்கு நேரம் போதவில்லை என்பது என் கருத்து. இருவரும் ஓவியக் கல்லூரியில் பயின்றவர்கள், பயிற்றுவிப்பவர்கள்/பயிற்றுவித்தவர்கள்.



பேரா. சிவராமகிருஷ்ணன்
சிவராமகிருஷ்ணன், பனமலை மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள பல்லவர் கால ஓவியங்களின் மிகச்சிறு எச்சங்களை எடுத்துக்கொண்டார். அவை எப்படி அஜந்தா ஓவியங்களின் தொடர்ச்சி என்றும் அதே நேரம் அடுத்து சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்களுக்கு முன்னோடி என்றும் காண்பித்தார். சித்திரசூத்திரத்தில் சொல்லியுள்ள தன்மைகளின்படி ஓவியங்கள் எவ்வாறு வரையப்பட்டுள்ளன என்று காண்பித்தார். ஓவியங்கள் குறைவாகவும் முழுமையின்றியும் இருந்தாலும் அவை எப்படி பல்லவர் காலச் சிற்பங்களுடன் ஒத்துப்போகின்றன என்பதைப் படங்கள் கொண்டு விவரித்தார். ஓவியத்தின் எச்சங்களில் உள்ள சில குறிப்புகளைக் கொண்டு, ஒத்துப்போகும் சிற்பங்களுடன் ஒப்புமைப்படுத்தி, அந்த ஓவியம் எது என்று கண்டுபிடிக்கலாம் என்று காட்டினார். சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, நாட்டியமாடும் சிவனைக் கண்டு மலரும் புன்சிரிப்புடன் உள்ள உமை என்ற சிலவற்றை சிற்ப, ஓவிய ஒப்புமைகளுடன் அழகாகக் காட்டினார்.

இவற்றைப் பார்க்கும்போது பல்லவ கால ஓவியங்களில் நாம் எவற்றையெல்லாம் இழந்துள்ளோம் என்ற வருத்தமே மேலோங்கியது.

சித்திரசூத்திரத்தின்படி, ஒருவர் சிற்பம் செதுக்கக் கற்றுக்கொள்வதற்குமுன், ஓவியம் வரையக் கற்றுக்கொள்ளவேண்டும். ஓவியம் வரைவதற்குமுன், நாட்டியம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். நாட்டியம் கற்றுக்கொள்ள ஒருவருக்கு வாத்திய இசை தெரிந்திருக்கவேண்டும். அதற்கோ வாய்ப்பாட்டு தெரிந்திருக்கவேண்டுமாம்.

குறுகிய காலத்தில் பேசிமுடித்த சிவராமகிருஷ்ணன், அதிகபட்ச நேரத்தை அவருக்கு வழங்குவதற்காக ஓவியர் சந்ருவை மிக வேகமாக அறிமுகப்படுத்திவிட்டு அமர்ந்தார். சந்ரு என்பது ஓர் அனுபவம், அதில் அமிழவேண்டும் என்றார்.

அமிழ்ந்தோம்.

சந்ரு சித்தன்னவாசலுக்குள் நுழைவதற்குமுன் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். அதில் முக்கியமான சில துளிகள் இவை:


சந்ருவுக்கு சித்தன்னவாசல் ஓவியங்களைப் பார்க்கும்போது தன் பாட்டன்மார்கள் வயக்காட்டில் வேலை செய்துகொண்டிருக்கும்போது அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் பேரன்/பேத்தி ஞாபகம் வருகிறது. தன்னையும் அவ்வாறே பார்க்கிறார். சித்தன்னவாசலில் அவருடைய பாட்டன்கள் ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறார்கள். இவர் உணவு எடுத்துச் சென்று கொடுத்துவிட்டு தானும் சில மண்கட்டிகளை எறிந்து விளையாடிவிட்டு மீண்டும் வீடு திரும்புகிறார். அவ்வளவு அணுக்கமானவை அந்த ஓவியங்கள். அவற்றைப் பார்க்கும்போது அவருக்கு பிரமிப்பு தோன்றுவதில்லை. மாறாக, ஆறாத அன்பு பீறிடுகிறது.

ஓவியர் சந்ரு
கலை என்பது குழந்தையின் அப்பாவித்தனமும் கற்றவனின் புத்திசாலித்தனமும் இணைந்தது என்றார் சந்ரு. ஓவியக் கலை எப்படிப் பரிணமித்தது, வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து பின் நவீனத்துவ காலம் வரை எப்படிப் பயணித்தது என்பதைத் தன் ஓவியங்களையே ஸ்லைடாகக் கொண்டு விளக்கிய சந்ரு, சித்தன்னவாசலை புதிய பார்வையில் காணச் சொல்லிக்கொடுத்தார்.

அங்கும் பெரும்பாலும் சிதைந்த ஓவியங்கள்தான். ஆனால் விதானத்தில் இருக்கும் கடிகபூமி ஓவியத்தின் வண்ணமற்ற வரைகோட்டுச் சித்திர வடிவத்தை வைத்துக்கொண்டு வண்ணமயமான ஒரு பேச்சுச் சித்திரத்தை அவர் படைத்தார்.

சமணர்களின் அடிப்படைத் தத்துவமே அனைத்து ஜீவராசிகளும் ஒரே தன்மையவை என்பதை அறிந்துகொண்டது அவருக்குப் பெரிய திறவுகோலைக் கொடுத்ததாம். மூன்று பவ்யர்கள், பல மீன்கள், சில பறவைகள், மூன்று எருமைகள், சில யானைகள் என சில உயிரினங்கள், அவற்றைவிட அதிகமான எண்ணிக்கையில் தாமரைகளும் அல்லிகளும் பரவியுள்ள ஒரு தடாகம். கோட்டோவியம் மூலம் அவற்றை வரிசையாகப் பிரித்துக் காண்பித்தார் சந்ரு.

அதற்குமுன், மைக்கலேஞ்சலோவின் ‘ஆதாமின் உருவாக்கம்’, லியனார்டோ டாவிஞ்சியின் ‘கடைசி உணவு’, அமராவதியின் ‘நளகிரியை அடக்குதல்’ என்ற மூன்று ஓவியங்களை முதலில் எடுத்துக்கொண்டு, ஓவியத்தின் மையப்பகுதி எதை முன்வைக்கிறது என்பதைக் காண்பித்தார். டாவிஞ்சி முன்வைப்பது நாயகர் ஏசுவை. மைக்கலேஞ்சலோ முன்வைப்பது தொடுதல் என்ற செயல்பாட்டை. நளகிரி (வட்டவடிவமான மெடால்லியன்) சிற்பத்தில் மையம் என்பது வெற்றிடம். புத்தரைக் கொல்லப் பாய்ந்துவரும் அபின் கொடுக்கப்பட்ட நளகிரி என்னும் மதயானை அவரைக் கண்டதும் அடிபணிந்து காலில் விழுவதுதான் சிற்பம். புத்தர் வலதுகோடி. பாயும் யானையும் பணியும் யானையும் படத்தில் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனாலும் மையப்புள்ளியில் ஒன்றுமே இல்லை. (நளகிரி ஓவியத்தை அஜந்தாவிலும் நளகிரி மெடால்லியனை படத்திலும் நீங்கள் காணலாம். சென்னை அருங்காட்சியகத்தில் கடந்த சில வருடங்களாக நளகிரி சேர்த்து அமராவதி சிற்பங்கள் அனைத்தும், பிரபலம் ஒருவர் வந்து திறக்கவேண்டும் என்பதற்காக, முடிக்கிடக்கும் ஓர் அறையில் இருப்பது பெரும் சோகம்.)

சித்தன்னவாசல் ஓவியத்தில் மையத்தில் எதுவும் இல்லை. வாய்க்காலில் பாய்ந்துவரும் நீர் மதகின் குறுக்கத்தால் வேகமடைந்து எதிரே உள்ள தடுப்பின்மீது மோதி சுழன்று சுழன்று வட்டமிட்டுப் பரவுவதுதான் ஓவியத்தின் வடிவம் என்பதைக் காட்டினார் சந்ரு. படத்தில் உள்ள ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் எந்தத் திசையை நோக்கி வரையப்பட்டுள்ளது என்பதைக் காண்பித்தார். அவற்றின் குவிதல் எந்தெந்த இடங்களில் அதிகம், எத்தனை பூக்கள் வலது பக்கம் பார்க்கின்றன, எத்தனை இடது, எத்தனை நேராக என்று காட்டினார். அதேபோல் விலங்குகள், பவ்யர்கள்.

இரண்டு மணி நேரம் பேசியிருப்பார். நேரம் போனதே தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏதோ ஒரு கட்டத்தில் பேச்சை நிறுத்தியாகவேண்டுமே என்றுதான் நிறுத்தினார். விட்டிருந்தால் இன்னமும்கூடப் பேசியிருப்பார்.

நமக்குக் கிடைத்திருக்கும் பல்லவர் கால ஓவியங்கள் கடவுளர்கள் பற்றியது. மைய நாயகன் சிவனின் வெவ்வேறு வடிவங்கள். வழிபடக்கூடிய உருவங்கள். சித்தன்னவாசலின் பாண்டியர் குகை சமண ஓவியம் சமண ‘சமவசரண’த்தின் போது பவ்யர்கள் பூப்பறிக்கச் செல்லும் கடிக-பூமி என்ற நீர்நிலையைக் காட்டக்கூடிய ஒற்றை ஓவியம். அந்த ஒற்றை ஓவியத்தைப் பற்றி இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிக்கொண்டிருக்கலாம் என்றால்...

இன்றும் நாளையும் நடக்கப்போவது மாபெரும் நிகழ்வுகள். அஜந்தாவில் இருபதுக்கும் மேற்பட்ட குகைகள். அவற்றில் திரும்பிய பக்கமெல்லாம் ஓவியங்கள். அவை காட்டும் கதைகள் ஏராளம். குறைந்தபட்சம் 30-க்கும் மேற்பட்ட ஜாதகங்கள், அவதானங்கள், புத்தரின் வாழ்க்கைச் சித்திரங்கள். ஒரு கதைக்கான ஓவியத்தை வைத்துக்கொண்டு பேசினாலே பல மணி நேரங்கள் பேசலாம். பேரா. சுவாமிநாதன் இன்று அவற்றைப் பற்றிப் பேசப்போகிறார்.

தமிழகத்தில் பெருமளவில் கிடைத்துள்ள செவ்வியல் ஓவியங்கள் தஞ்சை பிரகதீசுவரர் கோயிலில்தான் கிடைத்துள்ளன. அவற்றின் பிரம்மாண்டம் (அளவில் மட்டுமல்ல) பிரமிக்கவைப்பது. நல்ல வேளையாக நமக்கு அவை மிகச் சிறப்பான முறையில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுக் கிடைத்துள்ளது. (கூட ஒரு செய்தி, அனைத்து ஓவியங்களையும் தெளிவான முறையில் புரிந்துகொள்ள ஓவியர் சந்ருவின் கோட்டோவியங்களையும் சேர்த்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சென்ற ஆண்டு ஒரு புத்தகத்தைப் பதிப்பித்தது.) இங்கு கிடைத்துள்ள பொக்கிஷங்களைப் பற்றிப் பேச உள்ளார் விஜய குமார். இதற்கும் இரண்டு மணி நேரம் போதாது!

எனவே வாய்ப்பை நழுவவிடாதீர்கள். சென்னை, தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை, தத்வாலோகா. காலை 10-12 மணி.