இசையை ஆவணப்படுத்துதல், எஸ்.எல். நரசிம்மன், 2 ஏப்ரல் 2016


தமிழ்ப் பாரம்பரியக் குழுமம்
(Tamil Heritage Trust)
presents
இசையை ஆவணப்படுத்துதல்
(Archiving Music)
by 
எஸ்.எல். நரசிம்மன்
(S L Narasimhan)
at 5.30pm on Saturday, April 2nd, 2016
at 
Arkay Convention Center, 
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

தலைப்பு பற்றி:

இந்தியாவில் வயர் ரெகார்டிங் (Wire Recording) அறிமுகப்படுத்தப்பட்டது 1935-ல். அப்போதுமுதல்தான் இசைக் கச்சேரிகள் கருவிகளில் பதிவு செய்யப்படலாயின. பொப்பிலி மஹாராஜாவிடம் இவ்வகையில் பதிவு செய்யப்பட்ட சில நூறு மணி நேரங்களுக்கான இசை இருக்கிறது. இவை இன்றுவரை டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவில்லை. இதன் பின்னர் ஸ்பூல் டேப் முறையில் பதிவு செய்யும் கருவிகள் வரத்தொடங்கின.

வட இந்தியாவில், ராஜ் சிங் துங்கர்பூர் என்ற கிரிக்கெட் வீரரின் மூத்த சகோதரர் 10,000 மணி நேரத்துக்கும் அதிகமான இந்துஸ்தானி இசைக் கச்சேரிகளை ஸ்பூலில் பதிவு செய்திருந்தார். அக்காலத்தில் பல சிற்றரசர்களும் ஜமீந்தார்களும் இசைக் கச்சேரிகளைப் பதிவு செய்துவைத்தனர். தமிழகத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த புகையிலை வியாபாரியான அங்குசாமி என்பவர் நிறையப் பதிவுகள் செய்திருந்தார். சென்னையின் இந்து ஜி. நரசிம்மன், வி.டி.சுவாமி, ஆட்டோபார்ட்ஸ் நடராஜன், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.எம்.சுந்தரம், என்ஃபீல்ட் சுந்தரம் ஐயர் போன்றோர் நிறைய ஆவணப் பதிவுகளைச் செய்திருந்தனர். ஆட்டோபார்ட்ஸ் நடராஜன், மியூசிக் அகதெமியின் செயலராக இருந்தவர். அவர், தான் செயலராக இருந்த காலத்தில் அகதெமியின் கச்சேரிகளைத் தனக்கெனத் தனியாகப் பதிவு செய்திருந்தார். திருச்சியில் எஃப்.ஜி.நடேச ஐயரும் தேவக்கோட்டையில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் உட்படப் பல செட்டியார்களும் கச்சேரிகளைச் சேமித்துவைத்திருந்தனர். கள்ளிடைக்க்குறிச்சியில் பூதப்பாண்டி வைத்தா என்பவர் நாகஸ்வரக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்துவந்தார். அவர் காருக்குறிச்சி போன்றோரின் பல மணி நேரக் கச்சேரிகளைப் பதிவு செய்துவைத்திருந்தார். வைத்தாவின் சீடரான நாகர்கோவிலைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் மகாதேவனிடம் நிறையப் பதிவுகள் உள்ளன.

கேரளத்தில் ஏ.வி.தாமஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஆலப்புழை பார்த்தசாரதி ஐயங்கார், இசைக் கலைஞர்களைப் பெரிதும் ஆதரித்தவர். அரியக்குடியிடம் இசை பயின்றவர். அவர் நிறையப் பதிவுகளைச் செய்துவைத்திருந்தார். மைசூர் உடையார் அரச குடும்பத்தினர் தசரா கொண்டாட்டங்களின்போது நிகழும் இசைக்கச்சேரிகளை ஒலிப்பதிவாக மட்டுமின்றி, 16 எம்.எம் ஒளிப்பதிவுகளாகவும் செய்துவைத்தனர். ஆந்திரத்தில் மஹாராஜா ஆஃப் விஸயநகரம், குடும்ப ராவ், த்வாரம் முனிசாமி நாயுடு போன்றோர் இசை ஆவணப்படுத்தலில் ஈடுபட்டனர்.


பேச்சாளர் பற்றி:

எஸ்.எல்.நரசிம்மன் (எஸ்ஸெல்), கடந்த பல ஆண்டுகளாக இசைக் கச்சேரிகளை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். இசையை ஸ்பூலில் அல்லது வேறு வடிவில் சேமித்துவைத்திருப்பவர்களிடம் கெஞ்சி, இரவல் வாங்கி அல்லது ‘திருடி’ எடுத்துவந்து பத்திரமாக அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துவருகிறார். இதுவரையில் சுமார் 25,000-30,000 மணி நேரத்துக்கான இசையை டிஜிட்டைஸ் செய்திருகிறார். அதில் சுமார் 60% அளவுக்கான இசையை கேடலாக் செய்திருக்கிறார். இன்னும் தன்னிடம் 1,500 மணி நேரத்துக்கான இசை டிஜிட்டைஸ் செய்யப்படுவதற்காக உள்ளது என்கிறார். கடந்த சில வருடங்களில் பல இசைக் கச்சேரிகளை நேரடியாகச் சென்று டிஜிட்டல் பதிவுகளாகச் சேமித்தும் வருகிறார்.

இந்திய செவ்வியல் இசையை ஆவணப்படுத்தும் முக்கியமான சிலரில் இவரும் ஒருவர். கர்நாடக இசையைக் கற்றுக்கொள்வோருக்கும் கச்சேரி நிகழ்த்துவோருக்கும் உதவும் வகையில் இசையை ஆவணப்படுத்துவதில் இவர் தன் கவனத்தைச் செலுத்துகிறார்.

இந்த நிகழ்வில், இசையை ஆவணப்படுத்தியுள்ள முன்னோர்களைப் பற்றியும் அவர்களுடைய முயற்சிகள் குறித்தும், இசை ஆவணப்படுத்துதலில் தன் பங்கு குறித்தும் எஸ்ஸெல் விரிவாகப் பேசுவார். ஆங்காங்கே, பொருத்தமான பல அரிய இசைத் துண்டுகளையும் இசைக்கச் செய்வார்.

RSVP:
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video